கிறிஸ்தவர்களுக்கு ஏராளமான நன்மைகளை தி.மு.க. அரசு செய்துள்ளது: முதல்-அமைச்சர் பேச்சு

கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளது என மதுரையில் நடந்த பெந்தேகோஸ்தே திருச்சபை மாநாட்டில் காணொலி மூலம் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2023-02-08 21:04 GMT

சென்னை,

பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்றத்தின் 4-வது தேசிய மாநாடு மதுரையில் நேற்று நடந்தது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசியதாவது:-

இயேசு கிறிஸ்து இந்த மனித குலத்துக்கு கற்றுத்தந்த மதிப்பீடுகளை வரிசைப்படுத்தினால் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, இரக்கம், நீதி, தியாகம், பகிர்தல் ஆகியவற்றைத்தான் சொல்ல முடியும்.

சமத்துவ நாடு

'மனிதர்கள் அனைவரும் சமம்' என்பதுதான் சமத்துவம். 'யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே' என்பதுதான் சகோதரத்துவம். 'அனைவருடனும் சேர்ந்து வாழ்' என்பதுதான் ஒற்றுமை. 'ஏழைகள் மீது கருணை காட்டு' என்பதுதான் இரக்கம். 'அநீதிக்கு எதிராக குரல் கொடு' என்பதுதான் நீதி. 'மற்றவர்களுக்காக வாதாடு' என்பதுதான் தியாகம். 'உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு கொடு' என்பதுதான் பகிர்தல்.

இதைத்தான் கிறிஸ்தவம் சொல்கிறது. இத்தகைய குணங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால், அதுதான் சமத்துவ நாடாக அமையும்.

இத்தகைய பன்முகத்தன்மைதான் இந்திய நாட்டை மட்டுமல்ல, நாட்டு மக்களின் பண்பாட்டையும் காக்கும். மொழிகள் - மதங்கள் இனங்கள் வேறு வேறாக இருந்தாலும் இணைப்பது மனிதம்.

வேற்றுமையில் ஒற்றுமை

அத்தகைய மனிதக்கூறுகளை பின்பற்றுபவர்களாக மானுடம் திகழ வேண்டும். நாமும் வளர வேண்டும், நம்மை சுற்றி இருப்பவர்களும் வளர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் காலம் காலமாக நாம் பின்பற்றி வரக்கூடிய தமிழர் பண்பாடு. அனைவரையும் இணைக்கும் ஆற்றல் மொழிக்கு உண்டு.

அந்த வகையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைத்தான் தி.மு.க. அரசு நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம்.

கடந்த ஓராண்டு காலத்தில் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, வேளாண்மை, மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் நலன் என அனைத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கும் பணிகளை செய்து வருகிறோம்.

கிறிஸ்தவர்களுக்கு ஏராளமான நன்மை

குறிப்பாக, கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு ஏராளமான நன்மைகளை தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளது. தேவாலயங்களை சீரமைக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உபதேசியார் நல வாரியம் அமைக்கப்பட்டு உள்ளது.

கிறிஸ்தவ மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தருவதற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதிக்காக மைனாரிட்டி ஸ்டேட்டஸ் சர்டிபிகேட் இணையத்தின் மூலம் பெறுவதை எளிமையாக ஆக்கி இருக்கிறோம்.

சிறுபான்மையினர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்பட இருக்கிறது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கக்கூடிய மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம் அமைக்கப்பட இருக்கிறது.

மனநிறைவு ஏற்படுகிறது

கரூர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிக கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் கிறிஸ்தவ சமூக மக்களுக்கு கடந்த 20 மாத காலத்தில் செய்து தரப்பட்டுள்ள நலத்திட்டங்கள்.

தி.மு.க. அரசை பொறுத்த வரையில் நீங்கள் கோரிக்கை வைத்துத்தான் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. நாங்களாகவே பல்வேறு திட்டங்களை, நீங்கள் கோரிக்கை வைக்காமலேயே நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தி.மு.க. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களால், தமிழ்நாட்டு மக்கள் பயன் அடைந்து, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறபோதெல்லாம், எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது.

நிறைவேற்றி தருகிறோம்

எந்த நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்தார்களோ அதைவிட அதிக நம்பிக்கையை இந்த 20 மாத காலத்தில் பெற்றிருக்கிறோம். இந்த நம்பிக்கைக்கு பின்னால் இருப்பது உழைப்பு.

அந்த உழைப்புக்கு பின்னால் இருப்பது உண்மை. மக்களுக்காக உண்மையாக உழைக்கும் எங்களுக்கு இந்த பாராட்டுகள் அதிகம் உழைக்க தூண்டுகோலாக அமையும். இது எனது அரசு அல்ல, நமது அரசு. உத்தரவிடுங்கள். நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர் பி.மூர்த்தி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., இயேசு அழைக்கிறார் பால் தினகரன், பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் மாமன்ற தலைவர் பேராயர் டேவிட் பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்