எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணி வழங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கைதள்ளுபடி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-07-18 23:42 GMT

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் எல்லாம், அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் செய்தார்.

பின்னர், இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

புதிய விசாரணை

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது சூழ்நிலை மாறிவிட்டதால், விசாரணை கேட்டு தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், இந்த புகார் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணை திருப்தி இல்லை. எனவே, இந்த புகாரை மீண்டும் புதிதாக விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ் வாதிட்டார்.

ஆதாரம் இல்லை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தன் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா? என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி 2018-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவர்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி ஒப்பந்த பணி வழங்கினார் என்பதற்கோ, சுயலாபம் அடைந்தார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆட்சி மாற்றம்

அந்த அறிக்கையை லஞ்ச ஒழிப்பு இயக்குனரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிதாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த அனுமதி அளித்தது ஏன்? என்பதற்கு எந்தவித காரணங்களும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இடைப்பட்ட காலத்தில், ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதைதவிர, இந்த வழக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாற்றம் ஏற்படாத நிலையில், இந்த புகாரை மீண்டும் புதிதாக விசாரணை நடத்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் உத்தரவிட முடியாது.

அதிகாரம் இழப்பு

எந்த கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறது என்பது முக்கியமல்ல. அரசு என்பது சட்டத்தின்படி ஒன்றுதான். எனவே, அரசு எடுத்த முடிவை எந்த காரணங்களும் இல்லாமல் மாற்றவும் முடியாது. தனிநபர் அல்லது அரசியல் கட்சியின் செயல் திட்டம் சட்டத்தின் ஆட்சியை வீழ்த்தி விடக்கூடாது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தை அதிகாரிகள் இழந்து வருகின்றனர். மாறாக ஆட்சியில் இருக்கும் கட்சி பிறப்பிக்கும் உத்தரவுகளின்படி செயல்படும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

விவாத நிகழ்ச்சிகளின் தலைப்புகள்

அரசியல் கட்சிகளும் எச்சரிக்கையாக கையாண்டு, அதிகாரிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டன. அதுமட்டுமல்ல ஆட்சிக்கு வந்ததும், தங்கள் உத்தரவை அமல்படுத்தக்கூடிய அதிகாரிகளை முக்கிய பணிகளில் நியமிக்கின்றனர். நடைமுறையில் பார்க்கும்போது, அதிகாரிகளுக்கு அதிகாரம் எதுவும் இல்லை என்பதை காட்டுகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் வழக்குகள் எல்லாம் கோர்ட்டுக்கு வந்து விடுகின்றன. இதன்மூலம், அரசியல் லாபத்துக்காக இந்த ஐகோர்ட்டை ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் விளையாட்டு மைதானமாக பயன்படுத்துகின்றன.

இறுதியில், இந்த ஐகோர்ட்டு பிறப்பிக்கும் தீர்ப்புகள் எல்லாம், டி.வி. சேனல்களில் விவாத நிகழ்ச்சிகள் பயன்படுத்தப்படும் விவாத தலைப்புகளாக மாறி விடுகின்றன.

தேவை இல்லை

இதுபோன்ற வழக்குகளுக்கு செலவு செய்யும் ஐகோர்ட்டின் நேரம் எல்லாம் ஏழை மக்களுக்குரியது. அவர்கள், தங்கள் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தங்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்காதா? என்று காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த ஐகோர்ட்டை பொறுத்தவரை, சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அதிகாரிகள் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த தேவை இல்லை. வேண்டுமென்றால், கீழ் கோர்ட்டில் குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 156 (3)-ன் கீழ் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மனுதாரர் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்