`தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான்' அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-01-23 23:00 GMT

திருச்சி,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் காண்கிறார்.

அதேபோல் அ.தி.மு.க. சார்பில் இரு அணிகளும் தேர்தலில் போட்டியிட உள்ளன. இதையடுத்து இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அணியினரும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.

பா.ஜ.க. போட்டி இல்லை

அந்த அடிப்படையில் இரு அணியினரும் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர். இதற்கிடையே இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிட இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபட்டது. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜனதா போட்டியிடவில்லை என்பதை அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை சூசகமாக நேற்று தெரிவித்துள்ளார்.

அதாவது தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்கும் அளவுக்கு பலமான கட்சி அ.தி.மு.க.தான் என்பதை அவர் உறுதிபட கூறி இருக்கிறார். சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை வருகை தந்த அண்ணாமலை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய பெரிய கட்சி அ.தி.மு.க.தான். கூட்டணிக்கு என்று மரபு, தர்மம் உள்ளது. இடைத்தேர்தல்கள் என்பது ஒரு கட்சியின் பலத்தை, வளர்ச்சியை பார்ப்பதற்கான அளவுகோல் இல்லை.

தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். அந்த கட்சி அ.தி.மு.க தான்.

குழப்பம் இல்லை

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பணத்தை அதிகம் செலவு செய்வார்கள். தி.மு.க தேர்தல் குழுவில் 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலிருந்தே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர் வேட்பாளராக இருக்க வேண்டும். இதில் எந்தவித குழப்பமும் இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பல தலைவர்கள் அ.தி.மு.க.வில் இருக்கிறார்கள். பண பலம், படை பலம், அதிகார பலத்தை இந்த தேர்தலில் தி.மு.க.வினர் தவறாக பயன்படுத்த இருக்கிறார்கள். அதையெல்லாம் எதிர்த்து நிற்க கூடிய வேட்பாளர் அ.தி.மு.க. சார்பில் நிற்க வேண்டும். அவருக்கு பின்னால் எல்லோரும் அணிவகுத்து நிற்க வேண்டும். இதுதான் என் நிலைப்பாடு. எங்கள் கட்சியின் நிலைப்பாடு.

ஒத்துழைப்பு வழங்கவேண்டியது எங்கள் கடமை

அவ்வாறு நிற்க கூடிய வேட்பாளருக்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் வழங்க வேண்டியது எங்கள் கடமை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் என்னை சந்தித்து பேசி உள்ளார். சில விஷயங்களை நானும் பேசிக்கொண்டு இருக்கிறேன்.

அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பொதுவான வேட்பாளராக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அதேநேரத்தில் போட்டியிடும் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். பா.ஜ.க.வை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது.

என்ன தகுதி உள்ளது?

தற்போது எல்லா கட்சிகளைவிட காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் பிரச்சினை உள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்ற கட்சிகள் குறித்து எவ்வளவு தரக்குறைவாக பேசி உள்ளார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

குறிப்பாக சொன்னால் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பின்னால் நிற்பாரா என்பது சந்தேகம்தான். அப்படி இருக்கும்போது மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு என்ன தகுதி உள்ளது?

ஆதாரப்பூர்வமான பதில் தேவை

திருச்செந்தூர் கோவிலில் 5 ஆயிரத்து 309 மாடுகள் காணாமல் போகவில்லை என அறநிலையத்துறை அமைச்சர் சொல்லட்டும். 1,302 கோடி ரூபாய்க்கு துறை கணக்குகளில் ஆட்சேபனை இல்லை என அவர் சொல்லட்டும்.

கிட்டதட்ட 15 லட்சம் பில்களில் ஆட்சேபனை இருக்கிறது என நான் சொல்லி உள்ளேன். அமைச்சர் இல்லை என சொல்லட்டும். இந்த அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்ட ஆவணத்தின்படி கூறி உள்ளேன். ஒரு அமைச்சர் நாம் வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரப்பூர்வமாக பதில்கூற வேண்டும். பொத்தாம்பொதுவாக பேசக்கூடாது. கோவில் உண்டியலில் இருந்து மிக்சர், முறுக்குக்கு கூட பணம் எடுத்துள்ளீர்கள். இதற்காக அறநிலையத்துறை உருவாக்கப்படவில்லை. உண்டியலில் போடப்படும் பணம் கோவிலின் வளர்ச்சிக்காகத்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்