ஆரணி நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. உறுப்பினர்கள் காரசார வாக்குவாதம்

ஆரணி நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2022-09-30 17:35 GMT

ஆரணி

ஆரணி நகர்மன்ற கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க.வினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

கூட்டம்

ஆரணி நகர மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாரி பி. பாபு முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பினர் ரேவதி அரசு (தி.மு.க.) பேசுகையில், ''தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார் அவருக்கு நகர மன்றத்தின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.

வி.ரவி (தி.மு.க.):-சைதாப்பேட்டை பகுதியில் இறந்தவர்கள் உடல்கள் வி.ஏ.கே.நகர் இடுகாட்டில் புதைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த இடம் தற்போது அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. எனவே அந்த பகுதியை தினமும் தூய்மைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதா குமார் (அ.தி.மு.க.):- ஆரணி தர்மராஜா கோவில் மைதானத்தில் அமைந்துள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தீர்க்க அங்கு ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும்.

கடும் வாக்குவாதம்

ஏ.சி.பாபு (புதிய நீதி கட்சி):- சில தினங்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகம் அருகே அறிவு சார் மைய கட்டடம் அமைக்க ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு ஏன் சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை?

நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி:-

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட நிதியை நகராட்சி பகுதி பணிகளுக்கு பொதுப்பணி துறை மூலமாக நிதி ஒதுக்கி பணிகளை நேரடியாக செய்து வருகிறார். அதனை நகர வளர்ச்சி பணி செய்யப்பட்டு வருவதால் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஏன் அதை எங்களை அழைக்காமல் அவர் செய்கிறார்?

அப்போது நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்கள் சேர்ந்து, கேள்வி எழுப்பிய உறுப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தலைவரும், துணைத் தலைவரும் உறுப்பினர்களை சமாதானம் செய்து அமர செய்து கூட்டத்தை உடனடியாக முடித்தனர்.

பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் விவாதம் ஏற்படவே நகரமன்ற தலைவர் கூட்டத்தை உடனடியாக முடித்தார் அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் நடராஜன் ஏன் கூட்டத்தை காலையில் நடத்தி இருக்கலாம் அல்லது மாலை நடத்திருக்கலாம் பகல் 12 மணிக்கு நடத்தி உடனடியாக முடித்துக் கொள்கிறீர்கள் உறுப்பினர்கள் கோரிக்கையை உடனுக்குடன் பேச வாய்ப்பே கொடுக்கப்படவில்லை என்றார். அதற்கு தலைவர் ஏ.சி.மணி எதுவாக இருந்தாலும் அறைக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்