ஈரோடு மாவட்டத்துக்கு 25-ந் தேதி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு- தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 25-ந் தேதி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 25-ந் தேதி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. கூட்டம்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு வருகிறார். இதையொட்டி ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் ஈரோடு அருகே மேட்டுக்கடையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சோலார், கனிராவுத்தர்குளம் ஆகிய இடங்களில் புதிய பஸ் நிலையம் அமைத்தல், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது.
உற்சாக வரவேற்பு
உலகம் முழுவதும் இந்தியாவை திரும்பி பார்க்கும் வகையில், தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்-2022 என்ற சர்வதேச செஸ் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கும், தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுத்து வருவதற்கும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
டி.என்.பாளையம் ஒன்றியம் கள்ளிப்பட்டியில் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் புதிய சிலையை திறந்து வைக்கவும், ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 25-ந் தேதி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம், தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், மாவட்ட துணைச்செயலாளர்கள் செல்லப்பொன்னி, சின்னையன், செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.