தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2022-10-23 09:47 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தீபாவளி என தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.

கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம், பழைய கலங்கரை விளக்கம் உள்ளிட்ட புராதன பகுதிகள் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

பலர் புராதன சின்னங்கள் முன்பு குடும்பம், குடும்பமாக நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையால் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்த பொற்றோர்கள் அவர்களை மகிழ்விப்பதற்காக அவர்கள் கேட்ட பரிசு பொருட்களையும், தின்பண்டங்களையும் வாங்கி கொடுத்ததை காண முடிந்தது. புதுச்சேரியிலும் தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என தொடர் விடுமுறை விடப்பட்டதால் அந்த மாநில மக்களும் அதிக அளவில் நேற்று சுற்றுலா வந்திருந்ததை காண முடிந்தது.

கடல் சீற்றம் அதிகமிருந்த போதிலும் அதை பற்றி யாரும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் கடலில் குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் நேற்று சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் உள்ள கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை, மேற்கு ராஜ வீதி போன்ற முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலில் நின்ற வாகனங்களை சீர்படுத்தி ஒழுங்குபடுத்தினர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கடற்கரை சாலை, அர்ச்சுனன் தபசு வளாக பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டி இருந்ததை காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வழிகாட்டிகள் அனைவருக்கும் பயணிகளுக்கு சுற்றி காட்டும் பணிகள் கிடைத்ததால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு போதிய வருவாய் கிடைத்ததால் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்