விபத்து-குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை: 2,459 வழக்குகள் பதிவு
விபத்து-குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஒரே நாளில் 2,459 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
2,459 வழக்குகள்
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் குற்ற செயலை தடுக்கும் வகையிலும், விபத்துகளை குறைக்கும் வகையில் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள எல்லை பகுதிகளில், சோதனை சாவடிகள், முக்கிய சந்திப்புகளில் தீவிர வாகன சோதனையில் மேற்கொண்டனர்.
இதில், மொத்தம் 2,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 13 வழக்குகள் நம்பர் பிளேட் இல்லாத மற்றும் போலி நம்பர் பிளேட் வைத்து ஓட்டிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டியதாக 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொலை குற்றவாளி பிடிபட்டார்
மேலும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தனிப்படை போலீசார் 13 பேரை கைது செய்தனர். இதில் கரூர் நகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட உழைப்பாளி நகர் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த சென்னையை சேர்ந்த தமிழ்செல்வன் (25) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ள கொலை வழக்கு குற்றவாளி என தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த மீன் வெட்டும் கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிந்து, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் கூறுகையில், குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தினமும் சோதனை நடைபெறும். வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து வாகன சோதனைசெய்யப்படும் என தெரிவித்தார்.