கோத்தகிரியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா

கோத்தகிரியில் 25 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

Update: 2022-12-01 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரியில் 25 அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.

கலைத்திருவிழா

நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் உத்தரவின்படி, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி மேற்பார்வையில், கோத்தகிரி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளி அளவில் நடந்ததில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள 25 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வட்டார அளவிலான போட்டிகள் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் கவின் கலை, நுண் கலை, வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன், இசை சங்கமம் உள்பட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளை கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அமீலயா மற்றும் கொட்டகம்பை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோகராஜ் ஒருங்கிணைத்து நடத்தினர்.

மாவட்ட அளவிலான போட்டி

இந்தப் போட்டிகள் இன்றுயும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். அவர்களுக்கு 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

அதில் தகுதி பெறுபவர்கள், மாநில அளவில் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்பார்கள். இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் அழைத்துச் செல்லப்படும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தகுதி பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்