வள்ளியூரில் ரூ.30 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி; அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

வள்ளியூரில் ரூ.30 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-06-05 18:54 GMT

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ.30 கோடியில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். சுகாதார நல பணிகள் இணை இயக்குனர் லதா வரவேற்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

மா.சுப்பிரமணியன்

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து களக்காடு அரசு மருத்துவமனையில் டி.வி.எஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விஷமுறிவு சிகிச்சை பிரிவு கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாம்புகடி சிகிச்சை பிரிவு கட்டிடம், ரூ.6.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நோயாளிகள் காத்திருப்பு கூட கட்டிடம், ரூ.16.60 மதிப்பில் கட்டப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களுக்கான பொது கழிப்பறை கட்டிடம், மூலைக்கரைப்பட்டியில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து, 500 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.1,018 கோடி

கடந்த ஆட்சிக்காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் புதியதாக 25 மாவட்டங்களில் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அதில் வள்ளியூர் மருத்துவமனையும் ஒன்றாகும்.

அம்ைப அரசு மருத்துவமனை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு இணையாக உயர்த்துவதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. நாங்குநேரி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் உதயத்தூர், மேலப்பாளையத்தில் தலா ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில் இருந்து துணை இயக்குனர் அலுவலகம் வள்ளியூரில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

செவிலியர் கல்லூரி

அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், 'தமிழகத்தில் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது' என்றார்.

சபாநாயகர் அப்பாவு பேசுகையில், 'வள்ளியூருக்கு அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் இயங்கும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வந்திருப்பது வரப்பிரசாதமாகும். வள்ளியூரில் செவிலியர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திசையன்விளை அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி தரவேண்டும். நவ்வலடி மற்றும் துலுக்கர்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் யுனானி மருத்துவ சேவை தொடங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பேரூராட்சி பகுதிகளுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்காக ரூ.506 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அருகே தாமஸ் மண்டபத்தில் சர்வதேச தரத்துடன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார்'

Tags:    

மேலும் செய்திகள்