4 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்

வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 110 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-17 12:17 GMT

குடற்புழு நீக்க மாத்திரை

தேசிய குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழுக்களை நீக்க அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை வழங்கும் பணி தொடங்கியது. விடுபட்ட நபர்களுக்கு வருகிற 24-ந் தேதி வழங்கப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம் தொடக்க நிகழ்ச்சி வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வேலூர் தாசில்தார் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

4½ லட்சம் பேருக்கு...

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கி, மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், குடற்புழு மாத்திரையின் பயன்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினார். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி ஏற்றனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், வருவாய்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் 3,51,998 பேர், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 1,03,112 பேர் என்று மொத்தம் 4,55,110 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. அனைத்து துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் ஒன்று முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படுகிறது. இந்த பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்