9¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

கடலூர் மாவட்டத்தில் 9¼ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி தொடங்கியது.

Update: 2023-08-17 20:10 GMT

தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள் அதிக அளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. இதை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு 2 முறை குடற்புழு நீக்கம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்ட முகாம் நேற்று தொடங்கியது.

கடலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பென்டசோல்) 7 லட்சத்து 1617 குழந்தைகள், 2 லட்சத்து 23 ஆயிரத்து 660 பெண்கள் என 9 லட்சத்து 25 ஆயிரத்து 277 பேருக்கு வழங்கும் பணி தொடங்கியது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கோண்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். ெதாடர்ந்து மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும், 20 முதல் 30 வயதுள்ள பெண்களுக்கும், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி நடந்தது.

ரத்த சோகை

அதாவது, 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களிலும், 6 முதல் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு வீடு, வீடாக சென்று குடற்புழு மாத்திரைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுறு, சுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். விடுபட்ட அனைவருக்கும் வருகிற 24-ந்தேதி (வியாழக்கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்