492 உலமாக்களுக்கு சைக்கிள் வினியோகம்

நீலகிரியில் 492 உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2022-10-11 18:45 GMT

ஊட்டி

நீலகிரியில் 492 உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நலவாரியம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர்கள் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடியும் தருவாயில் மீண்டும் பதிவினை புதுப்பிக்க வேண்டும்.

நலத்திட்ட உதவிகள்

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 24 பேருக்கு ரூ.12,000 மதிப்பில் கண் கண்ணாடிகள் 7 உறுப்பினர்களின் குடும்பத்திற்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.1.25 லட்சம், 7 உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ.26,000 ஈமச்சடங்கு உதவித்தொகை, 6 உறுப்பினர்களுக்கு ரூ.36,000 மகப்பேறு உதவித்தொகை, 17 பயனாளிகளுக்கு ரூ.39,000 கல்வி உதவித்தொகை, விபத்தினால் மரணமடைந்த ஒரு உறுப்பினரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம், ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ.75,000 விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, 11 பயனாளிகளுக்கு ரூ.4.10 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், 10-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.8,000 வரை கல்வி உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000 மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.1,000, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

492 பேருக்கு சைக்கிள்

நீலகிரி மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு 492 பேருக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக ஊட்டி தாலுகாவை சேர்ந்த 60 உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கூடலூர் பகுதியில் உள்ள 432 உலமாக்களுக்கு விரைவில் சைக்கிள் வழங்கப்படும். இதனை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்