செய்யாறு
செய்யாறில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வெங்கட்ராயன்பேட்டை, திருவோத்தூர், மார்க்கெட் பகுதி, வழுவூர்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று நடந்தது. இதையொட்டி திருவோத்தூர் பகுதியில் வேதபுரீஸ்வரர் கோவில் அருகே இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாநில தலைவர் மணலி மனோகரன் கொடியசைத்து ஊர்வலத்ைத தொடங்கி வைத்தார்.
மார்க்கெட், காந்தி சாலை, காசிக்கார தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு வழியாக பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோனேரிராயன் குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர் 10 விநாயகர் சிலைகளை தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிரேன் உதவியுடன் குளத்தில் கரைத்தனர்.
இதையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, 4 துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.