பீர்க்கங்காய் கொடிகளில் நோய் தாக்குதல்

நெகமம் பகுதியில் பீர்க்கங்காய் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-02-02 18:45 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் பீர்க்கங்காய் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பீர்க்கங்காய் சாகுபடி

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. குறிப்பாக தக்காளி, பொரியல் தட்டை, வெங்காயம், கத்தரி மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகளே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக விளைநிலங்களில் தோட்டக்கலைத்துறை மானிய திட்டத்தின் கீழ் பந்தல் அமைத்து, சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் பீர்க்கங்காய் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது பீர்க்கங்காய் கொடிகளை நோய் தாக்கி வருகிறது. இதனால் பீர்க்கங்காய் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பறிக்காமல் விட்டுள்ளோம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பந்தல் காய்கறிகளை ஒருமுறை சாகுபடி செய்தால் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பலன் தருகிறது. மகசூலும் கூடுதலாக கிடைக்கிறது. பீர்க்கங்காய் சாகுபடியில் 10 அடி இடைவெளி விட்டு, மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் 5 அடி இடைவெளி அடிப்படையில் ஏக்கருக்கு 4 ஆயிரம் கொடிகள் வரை நடவு செய்யலாம்.

சிறந்த பராமரிப்பு மற்றும் மழை கிடைத்தால் தொடர்ந்து 75 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.

கடந்த சில நாட்களாக பீர்க்கங்காய் கொடியில் நோய் தாக்கி வருகிறது. இதனால் காய்கள் பெரிதாக வளர முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் காய்களில் சொத்தை விழுந்தும், சுருண்டும் வருகிறது. இதனால் பறிக்காமல் கொடியிலேயே விட்டு விடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்