அருநூற்றுமலை பகுதியில் புலிக்குத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிப்பு
அருநூற்றுமலை பகுதியில் புலிக்குத்தி வீரன் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி,
கல்வராயன் மலையின் தொடர்ச்சியாக வாழப்பாடி பகுதியில் உள்ள அருநூற்றுமலையில் ஆலடிப்பட்டி, பெலாப்பாடி, சிறுமலை ஆகிய மலைக்கிராமங்களில் சேலம் வரலாற்று ஆர்வலர்கள் குழுவை சேர்ந்த ஏ.டி.மோகன், பெரியசாமி, ஆசிரியர்கள் பெருமாள், கலைச்செல்வன், முத்தையன், நித்தியானந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த 16, 17-ம் நூற்றாண்டுகளில் அருநூற்று மலைப்பகுதியில் விலங்கு-மனித மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. குறிப்பாக புலிகள் மக்களைத் தாக்க முயலும்போது, புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற வீரத்துடன் சண்டையிட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு இங்கே நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன. வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் மரபு பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. அந்த வகையில் அருநூற்றுமலை, ஆலடிப்பட்டி கிராமங்களில் 16-ம் நூற்றாண்டு நடுகல்லொன்று காணப்படுகிறது. இதில் வீரனுக்கு வலது புறத்தில் நின்று கொண்டிருக்கும் ஆக்ரோஷமான புலி வீரனை தாக்குவது போலவும், அவ்வீரன் தனது இரு கைகளால் ஈட்டியை கொண்டு புலியை குத்துவது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் தலையில் அழகிய கொண்டையும், காதணி மற்றும் சரபலி, ஆரம், காப்பு மற்றும் காலில் வீரக்கழல் போன்ற அணிகலன்களை அணிந்துள்ளான். இதனை மக்கள் இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர்.
மேலும் பெலாப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே ஒரு நடுகல் காணப்படுகிறது. இந்த நடுகல்லில் வீரனுக்கு இடதுபுறத்தில் புலி ஒன்று வீரனை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. வீரன் தனது இடது கையில் கட்டாரியை கொண்டு புலியின் வாயில் குத்துவது போன்றும், வலது கையில் ஈட்டியை கொண்டு புலியின் வயிற்றில் குத்துவது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வீரனின் தலையில் அழகிய கொண்டை கட்டப்பட்டுள்ளது. காதணிகள் மற்றும் ஆடை, ஆபரணங்கள் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டுள்ளன. இது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஆகும். இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் எண்ணற்ற இன்னும் பல வரலாற்று சின்னங்களும், அவை குறித்த சுவாரசியமான தகவல்களும் வெளிவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.