பல்லவர் கால லகுலீசர் சிற்பம் கண்டெடுப்பு

முன்னூரில் பல்லவர் கால லகுலீசர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-01-02 18:45 GMT

திண்டிவனம் அருகே உள்ளது முன்னூர் கிராமம். இங்கு விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பல்லவர் காலத்தைச்சேர்ந்த லகுலீசர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அவர் கூறியதாவது:-

முன்னூர் கிராமத்தில் சோழர்கால சைவ, வைணவக்கோவில்கள் இருக்கின்றன. சம்புவராயர்களின் தொடக்க கால தலைநகராகவும் முன்னூர் இருந்திருக்கிறது. இங்கிருக்கும் செல்லியம்மன் கோவில் எதிரே சுமார் 5 அடி உயரமுள்ள பலகைக்கல் சிற்பம் நின்றிருக்கிறது. இவரை செல்லியம்மன், காளி என்று அப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.

களஆய்வில் இந்த சிற்பம் லகுலீசர் என்று அறியப்பட்டது. வலது கையில் தண்டத்தை ஏந்தியும், இடது கரத்தை தொடையின் மீது வைத்தும் ஒரு காலை மடித்தும், இன்னொரு காலை தொங்கவிட்ட நிலையிலும் அமர்ந்திருக்கிறார் லகுலீசர். தலை அலங்காரம் பல்லவர் காலம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இது 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

சைவத்தின் பிரிவுகளில் ஒன்றாக பாசுபதம் அமைந்துள்ளது. இதன் தோற்றுனர் லகுலீசர் ஆவார். சிவனின் 28-வது அவதாரமாக லகுலீசர் அறியப்படுகிறார். முன்னூர் கிராமத்தில் இதுநாள் வரை பெண் தெய்வமாக வணங்கி வந்தவர்கள் தற்போது ஆண் தெய்வம் என அறிந்து லகுலீசரை வணங்கத்தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது முன்னூரை சேர்ந்த எழுத்தாளர்கள் ரமேஷ், வேணுகோபால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்