பழங்கால சிலை கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை அருகே பழங்கால சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-07-11 22:37 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே பழங்கால சிலை கண்டெடுக்கப்பட்டது.

கள ஆய்வு

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்களான விஜயராகவன், ராஜபாண்டி ஆகியோர் எம்.ரெட்டியாபட்டி அருகே உள்ள மறவர் பெருங்குடி என்னும் கிராமத்தில் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது அதே ஊரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கண்மாயில் அரிய வகை சிற்பங்கள் உள்ளதாக தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஊர் கண்மாய்க்கு சென்று அவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு 3 அடி உயரம் உடைய சிலை ஒன்று, 3 பாகங்களாக உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. உடைந்த சிலையினை கண்ட பேராசிரியர்கள் அவற்றை சுத்தம் செய்து உடைந்த பாகங்களை பொருத்தி ஆய்வு மேற்ெகாண்டனர்.

குல தெய்வம்

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது:-

தற்பொழுது கிடைத்துள்ள சிலையானது பல பாகங்களாக உடைந்த நிலையில் உள்ளன. உடைந்த சிலையின் 2 பாகங்கள் மட்டுமே தற்பொழுது கண்மாயின் மேற்புறத்தில் காணப்படுகிறது.

இச்சிலையின் எஞ்சிய பாகமானது நீருக்கு உள்ளே மூழ்கியுள்ளதாகவும், 3 அடி உயரத்தில் நான்கு கைகளுடன் கேடயம், கபாவம், பாசத்தை தாங்கியவாறும் இடது கால் தரையில் வீழ்ந்துள்ள உருவத்தின் தலையில் அழுத்தியவாறு காட்சியளிக்கிறது. காதுகளில் குண்டலத்தை சூடியுள்ளது. இவை சோழர்களின் குலதெய்வமான நிசம்பசூதனி ஆகும். பிற்காலச் சோழர்களின் ஆட்சியின் போது சோழர்கள் போருக்கு செல்ல நேர்ந்தால் நிசம்பசூதனி சிலையினை வழிபட்டு போருக்கு செல்வது வழக்கம்.

வெற்றி வாகை

நிசம்பசூதனியினை வழிபட்டு போருக்கு சென்றால் அப்போரில் வெற்றி வாகை சூட இயலும் என்ற நம்பிக்கை சோழ மன்னர்கள் மற்றும் சோழ படைவீரர்களிடையே திகழ்ந்துள்ளது.

சோழர்களின் குல தெய்வமான நிசம்பசூதனி பாண்டியர்களின் ஆட்சி பகுதியில் காணப்படுவது அரிதான ஒன்றாகும். பிற்கால சோழர்களின் ஆட்சி காலத்தில் பாண்டியர்கள் வலுவிழந்து காணப்பட்டனர். அப்பொழுது பாண்டியநாடு முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் சென்றது. அப்பொழுது இந்த சிலையினை ஊரில் வடிவமைத்து வழிபட்டுச் சென்று இருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்