தென்பெண்ணை ஆற்றங்கரையில் சங்ககால சுடுமண் குழந்தை பொம்மை கண்டெடுப்பு

புதுப்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் சங்ககால சுடுமண் குழந்தை பொம்மை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-01-18 19:25 GMT

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள அக்கடவல்லி தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சங்ககாலத்தை சேர்ந்த குழந்தை பொம்மை மற்றும் வட்டச்சில்லு ஆகியவற்றை கண்டெடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கள ஆய்வின் போது சுடுமண்ணாலான பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மேலும் களஆய்வு மேற்கொண்ட போது அக்கடவல்லி பகுதியில் சங்ககாலத்தை சேர்ந்த சுடுமண்ணாலான குழந்தை பருவம் பொம்மை, சுடுமண் பொம்மையின் உடைந்த கை பாகம், வட்டச்சில்லு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட குழந்தை பருவ பொம்மை பாதி உடைந்த நிலையில் உள்ளது. உடைந்த பொம்மையில் இடுப்பு பகுதியின் கீழ் பகுதி மட்டும் காணப்படுகிறது. குழந்தை உட்கார்ந்த நிலையில் இருப்பதுபோல் உள்ளது. மற்றொன்று உடைந்த சுடுமண் பொம்மையின் கை பகுதி மட்டும் கிடைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் சங்ககால பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் கிடைக்க கூடிய தொல்பொருட்களை பார்க்கும்போது பழங்கால மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்து இருக்கின்றனர் என அறியமுடிகிறது. இதுபோன்ற சுடுமண்ணாலான பொம்மைகள் தமிழக அகழ்வாய்வுகளில் அதிகம் கிடைத்துள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்