திருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு
திருப்பத்தூர் அருகே பெரிய போர் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியில் 13-ம் நூற்றாண்டைசேர்ந்த வீரனின் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அருகே ஜெயபுரம் என்ற இடத்திலுள்ள ஏரிக் கால்வாயின் மேற்கு கரையில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வீரனின் நடுகல்லை தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறுகையில்,
ஜெயபுரம் ஊர்மக்கள் அளித்த தகவலின் பேரில் சந்திரபுரம் சின்ன ஏரியில் இருந்து வரும் கால்வாய் ஓரம் ஒரு நடுகல் இருப்பதைக் கண்டறிந்தோம். புதர் மண்டிய அப்பகுதியினை ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்து நடுகல் ஆய்வு செய்யப்பட்டது.
நடுகல்லானது 4 அடி உயரமும் 2.5 அடி அகலமும் கொண்ட வெள்ளை நிற பலகைக் கல்லில் வீரனின் உருவம் செதுதுக்கப்பட்டுள்ளது. வீரன் மேல் நோக்கிய கொண்டையும், நீண்ட காதுகளில் குண்டலமும், கழுத்தணியும் அணிந்து காணப்படுகின்றார். முதுகில் அம்புகள் நிறைந்த கூடினையும் வலது கையில் வில்லினையும் இடது கையில் அம்பினையும் ஏந்தி சண்டையிடும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வீரனின் இடுப்புப் பகுதியில் பெரிய போர் வாளினையும் வைத்திருப்பதால் இவர் சிறந்த வீரர் என்பதை சிற்பி விளக்க முற்படுகின்றார்.
இவ்வீரன் இப்பகுதியில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்தவராவார். நடுகல்லில் இவ்வீரரின் தலை, மார்பு, வலது கால் ஆகிய பகுதிகளில் எதிரிகள் எய்த அம்புகள் வலுவாகப் பாய்ந்து உயிர் துறந்ததை விரிவாக விளக்கியுள்ளனர்.
நடுகல்லில் உள்ள சிற்ப வேலைப்படுகளை வைத்து கி.பி. 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இந்நடுகல் இருக்கக்கூடும். சந்திரபுரம் பகுதியானது பெரிய போர் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும் என்பது இவ்வூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு நமக்கு தெளிவுபடுத்துகிறது. அதற்கு ஜெயபுரம் கால்வாயில் கண்டறியப்பட்ட இந்த நடுகல்லும் ஒரு சான்றாக அமைகின்றது.
இந்நடுகல் இப்பகுதியின் வரலாற்றுப் பதிவுகளைத் தாங்கிய ஆவணம் என்பதால் இதனைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.