ஊனம் என்பது உடலில் இல்லை: மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்

ஊனம் என்பது உடலில் இல்லை என்றும், மாற்றுத்திறனாளிகளை மதிப்போம் என்றும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்தனர்.

Update: 2022-12-03 15:06 GMT

 இன்று சர்வதேச

மாற்றுத்திறனாளிகள் தினம்.

சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

21 வகையானவர்கள்

கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.

2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டனர்.

தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.

அரசு திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும்விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்குக் கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலை தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.

அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்:-

பயனளிக்கும் உதவித்தொகை

சோபனா (மாற்றுத்திறனாளி, தர்மாபுரி) :- நான் லேப் டெக்னீசியன் படித்து விட்டு வேலை பார்த்து வந்தேன். கடந்த 12 ஆண்டுக்கு முன்பு மாடியில் இருந்து விழுந்து விட்டேன். இதில் எனது முதுகுத்தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. தற்போது தொலைதூரக் கல்வி மூலம் பி.எஸ்சி. கணினி அறிவியல் 2-வது ஆண்டு படித்து வருகிறேன். அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த உதவித்தொகையும் கிடைத்தால் பெற்றோர் என்னை பராமரிக்க மேலும் உதவியாக இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கினால் அவர்களின் வாழ்க்கை நிலைமை மாறும். நம்பிக்கையோடு அவர்களின் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும்.

தேன்மொழி (மாற்றுத்திறனாளி கூடைப்பந்து வீராங்கனை, நாராயணத்தேவன்பட்டி) :- போலியோ பாதிப்பால் எனது 4 வயதில் கால்கள் செயல் இழந்தன. பிளஸ்-2 முடித்துவிட்டு பி.ஏ. தமிழ் பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அதை முழுமையாக தொடர முடியாமல் குடும்ப சூழலால் கைவிட்டுவிட்டேன். பள்ளி, கல்லூரி படித்த போது மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணியில் இடம்பெற்று பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். திருமணத்துக்கு பிறகு தற்போது அரசு மானியத்துடன் பெற்ற கடனுதவியால் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன்.

எனது கணவரும் மாற்றுத்திறனாளி. கடனுக்கான தவணைத் தொகையை கணவருக்கு அரசு கொடுக்கும் உதவித்தொகையில் இருந்து பிடித்துக் கொள்கின்றனர். அந்த கடனை நாங்கள் திருப்பிச் செலுத்தும் வகையில் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவி திட்டங்களை மேலும் அதிகரிக்கலாம். குடிசை மாற்றுவாரியம் மூலம் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்களிப்பு தொகை இன்றி இலவசமாக வீடு வழங்க வேண்டும்.

சைகை மொழி பெயர்ப்பாளர் தேவை

முத்துப்பாண்டி (மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர், தேனி) :- மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்விக்கு அரசு பல உதவிகளை செய்து வருகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பாடத்திட்டங்கள், கையேடுகளை வடிவமைக்கும் போது சிறப்பு பயிற்றுனர்களையும் கலந்து ஆலோசித்தால் இன்னும் சிறப்பான பாடத்திட்டங்களை வடிவமைக்க ஏதுவாக இருக்கும். மாணவ, மாணவிகளுக்கான கற்றல், கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் போது, சிறப்பு பயிற்றுனர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இது குழந்தைகளை உற்சாகப்படுத்துகிறது. ஒருமுறை மட்டும் நடத்தாமல் தொடர்ச்சியாக பல போட்டிகள் நடத்தலாம். வணிக வளாகங்கள், தியேட்டர்களில் மாற்றுத்திறனாளிகள் சென்று வரும் வகையில் சாய்தள வசதி அமைக்க வேண்டும்.

ரவி (தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை மாற்றுத்திறனாளி அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்) :- தேனி மாவட்டத்தில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கிராமப்புற பகுதிகளில் இன்னும் அடையாள அட்டை கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த திட்டங்களின் மூலம் பயன்பெற காலதாமதம் ஏற்படுகிறது.

வங்கிகளில் எளிதில் கடன் பெற முடியவில்லை. அரசு அலுவலகங்களில் வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சைகை மொழி பெயர்ப்பாளரை பணியில் ஈடுபடுத்த வேண்டும். அரசுத்துறைகளில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். சில இடங்களில் இருந்தும் அவை மூடிக் கிடக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்