மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு பிரசார பயணம்
புவி வெப்பமயமாதல் தொடர்பாக மாற்றுத்திறனாளி விழிப்புணர்வு பிரசார பயணம்
பீகார் மாநிலம் கயா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹசன் இமாம் (வயது 25), மாற்றுத்திறனாளி. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், புவி வெப்பமாதல் குறித்தும், மாற்றுத் திறனாளிகள் அனைத்து இடங்களிலும் சிரமமின்றி சென்று வர கட்டமைப்பு வசதிகள் செய்யவும் விழிப்புணர்வு ஏற்பட்ட கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் மூலம் நேற்று காலையில் கன்னியாகுமரியில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம் வழியாக செல்கிறார். இந்த பிரசார பயணத்தில் மொத்தம் 100 நாட்களில் 3 ஆயிரத்து 43 கிலோ மீட்டரை கடக்க திட்டமிட்டுள்ளார். வழிநெடுகிலும் மக்களை சந்தித்து புவி வெப்ப மயமாதலின் ஆபத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வினியோகிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை பயணத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு மின்சார மோட்டார் சைக்கிளை தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி உள்ளது.