சிங்கப்பூர்- மதுரைக்கு நேரடி விமான சேவை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சிங்கப்பூர் - மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Update: 2023-05-26 00:11 GMT

சென்னை,

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில், பல நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், அந்த நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை மந்திரி ஈஸ்வரனையும் சந்தித்தார்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடினார். அத்துடன் சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அழைப்பு

தொடர்ந்து, சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முதல்-அமைச்சர், சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி கே.சண்முகத்தை சந்தித்து, சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இச்சந்திப்பின்போது, மந்திரி சண்முகம், கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை முன்முயற்சியின் மூலம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணைய பாதுகாப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்த வேண்டும். மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல், தரவு தனியுரிமை அம்சங்கள் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது ஆகியவை குறித்து, முதல்-அமைச்சர் உரையாடினார்.

நேரடி விமான சேவை

மந்திரி சண்முகம், முதல்-அமைச்சரிடம் பேசும்போது, 'சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு, முதல்-அமைச்சர் இது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்