தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-25 19:43 GMT

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் மூலம் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.

மயில்சாமி, விருதுநகர்.

சேதமடைந்த மின்கம்பம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பாரதி நகர் ரேஷன் கடை அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சேதமடைந்த மின் கம்பத்தின் அருகே புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது. எனவே இந்த சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் நடப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தில் மின் இணைப்புகளை மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சாத்தூர்.

மின்விளக்கு சரி செய்யப்படுமா?

விருதுநகர் மாவட்டம் வடுகப்பட்டி ஊராட்சி அழகாபுரி பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனகலட்சுமி, வடுகப்பட்டி.

செய்தி எதிரொலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே இருந்த வாருகால் கான்கிரீட் தள மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சேதமடைந்த தளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

சுந்தரமூர்த்தி, சாத்தூர்.

போக்குவரத்து நெரிசல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

முத்துச்சாமி, சிவகாசி.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், வத்திராயிருப்பு.

சுற்றுச்சுவர் தேவை

விருதுநகர் ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள மயானம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இங்கு இறுதி சடங்கு செய்ய வரும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இதனை சரி செய்யவும் மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித் தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், தம்மநாயக்கன்பட்டி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 17-வது வார்டு சஞ்சீவிநாதபுரத்தில் உள்ள கழிவுநீர் வாருகால் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி அதிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராஜபாளையம்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மாணவர்களும் வேலைக்கு செல்பவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

கதிர், ஆலங்குளம்.

நோய் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களின் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சக்திவேல், திருச்சுழி.

Tags:    

மேலும் செய்திகள்