தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-14 18:41 GMT

பொதுமக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் தெருவில் செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கிறது. நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சுமதி கவியரசன், ஏழாயிரம்பண்ணை.

பஸ்வசதி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதன் காரணமாக காரியாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல பஸ்கள் மாறி, மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கிருந்து மதுரைக்கு போதிய பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரமேஷ், காரியாபட்டி.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் பஜாரில் இருந்து நான்கு வழிச்சாலை மேம்பாலம் வரையிலான சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், அருப்புக்கோட்டை.

வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் ஒன்றியம் முத்துராமலிங்கநகரில் பல இடங்களில் சாலை ஆங்காங்கே பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். விபத்துகளும் நடக்கிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?

பொதுமக்கள், முத்துராமலிங்கநகர்.

பம்பு அமைக்கப்படுமா?

விருதுநநர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 30-வது வார்டில் சிறுமின் விசைப்பம்பு அமைக்கப்பட்டது. ஆனால் திடீரென தற்போது அந்த பம்பை அகற்றிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சிரமமாக உள்ளது. எனவே மீண்டும் விசைப்பம்பை அமைக்க வேண்டும்.

பாண்டி, சிவகாசி.

Tags:    

மேலும் செய்திகள்