தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-08-20 20:15 GMT

தெரு விளக்குகள் வேண்டும்

மதுரை வைகை வடகரை விரிவாக்க சாலை, ஆழ்வார்புரம், சண்முகம் சாலை சந்திக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும். ராமராயர் மண்டபத்தில் இருந்து ஓபுளா படித்துறை மேம்பாலம் வரை போதிய தெரு விளக்குகள் இல்லாததால் இப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. எனவே போக்குவரத்து மிகுந்த பகுதியில் தேவையான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். அன்புமணி, மதுரை கிழக்கு, மதுரை.

தெரு நாய்கள் தொல்லை

மதுரை வில்லாபுரம், மீனாட்சிநகர், வைத்தீஸ்வரன் தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் இரவு முதல் அதிகாலை வரை அடிக்கடி குரைப்பதால் தூக்கம் கெடுகிறது. மேலும் வீடுகளின் முன்பு அசுத்தம் செய்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

ரவீந்திரநாத், மதுரை மத்தி, மதுரை.

சேதமடைந்த சாலை

மதுரை மாநகராட்சி வி.கே.சாமிநகர், சூர்யா நகர் சாலைகள் சேதமடைந்து உள்ளது. மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சசிகுமார், சூர்யா நகர், மதுரை.

கண்மாய் தூர்வாரப்படுமா?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கொம்பாடி ஊராட்சியில் உள்ள மேலகண்மாய், கீழகண்மாய், ஊருணி ஆகிய நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது. எனவே இந்த நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ராம்குமார், கொம்பாடி, மதுரை.

பஸ் இயக்கப்படுமா?

வாடிப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி பங்களா, சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், தேன்கல்பட்டி, செக்கானூரணி, கரடிக்கல் வழியாக திருமங்கலம் வரை இயக்கப்பட்டு வந்த 999 வழித்தட பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே மீண்டும் இந்த வழித்தடத்தில் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், வாடிப்பட்டி, மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்