'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
மதுரை மாநகராட்சி 91-வது வார்டு மீனாட்சி நகர் எம்.ஜி.ஆர். தெரு பகுதியில் உள்ள சாக்கடை நிரம்பி கழிவுநீரானது சாலையில் செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலையில் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வினோ, மதுரை.
மாணவர்கள் அவதி
மதுரை கல்பாலத்தில் இருந்து யானைக்கல் செல்லும் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.
முத்துமாரி, மதுரை.
சாலை அமைக்கப்படுமா?
மதுரை வில்லாபுரம் சித்தர்தெரு சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மேலும் மழை பெய்தால் சாலையில் நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்றி நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரியப்பன், மதுரை.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
வாடிப்பட்டி அருகே உள்ள சால்வார்பட்டி ஊத்துக்கண்மாய் பகுதியை கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர்த்தட்டுப்பாடு நிலவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள், வாடிப்பட்டி.
திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்
மேலூர் யா.கொடிக்குளம் நடுநிலைப்பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயானது மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. கால்வாயில் துர்நாற்றம் வீசுவதால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயினை மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஸ்கரன், மேலூர்.
கலையரங்கம் வேண்டும்
மதுரை மாநகர் 23-வது வார்டு அய்யனார் கோவில் தெருவில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கோவில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சி நடைபெறுவதற்கு கலையரங்கம் இல்லை. எனவே இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கலையரங்கம் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தனகுமார்,மதுரை.
நாய்கள் தொல்லை
கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் பயத்துடன் வெளியே சென்று வருகின்றனர். மேலும் நாய்கள் விபத்தை ஏற்படுத்துவதுடன் சிலரை கடித்தும் விடுகிறது. எனவே இதுகுறித்து தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொட்டாம்பட்டி.
பழுதான உயர் மின்விளக்கு
திருச்சி-சென்னை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூரில் உயர் மின் விளக்குகள் மற்றும் சிக்னல்கள் சில இடங்களில் பழுது அடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிக் ராஜா, மேலூர்.
சாலையில் கொட்டப்படும் குப்பைகள்
சோழவந்தான் திருவாலவாயநல்லூர் பகுதியில் உள்ள சாலையில் குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டையும் உருவாக்குகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நவீன்குமார், திருவாலவாயநல்லூர்.
விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை காமராஜர் சாலை பிஜசர் ரோடு சந்திக்கும் பனையூர் கால்வாய் சந்திப்பில் உள்ள கால்வாய் சுவர் உடைந்து உள்ளது. இதனால் இப்பகுதி வழியே இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே விபத்து எதுவும் நிகழ்வதற்குள் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், மதுரை.