தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-01 17:59 GMT

பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அவதியுறும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் நகரில் உள்ள பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களின் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளன. எனவே, பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இச்சாலைகளில் செல்ல மிகவும் அவதியுறுகின்றர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள் அச்சம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி பஸ் நிலையத்தில் தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தின் பின்புறம் சீமை கருவேல மரங்கள் முளைத்து காடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் குட்டை போல் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் பயணிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் தொற்று அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் ஒரு வருடத்திற்கு மேலாக கிடக்கிறது. இதன் மூலம் உருவாகும் கொசுக்களினால் பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சி புது அம்மாபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பெண்களுக்கான சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் பராமரிப்பு இன்றி கிடந்ததையடுத்து தற்போது பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டு, நீண்ட நாட்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்