தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பராமரிக்கப்படாத கழிவறை
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் நலனுக்காக பஸ் நிலையத்தில் பொது கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குட்டைபோல் மாறிய சாலை
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா தீத்தானிப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த அய்யங்காட்டிலிருந்து மாங்கோட்டை வரை செல்லும் இனணப்புச்சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாகவே உள்ளது. பராமரிப்பு இல்லாத இந்த சாலையில் ஆங்காங்கே பள்ளம், படுகுழிகள் ஏற்பட்டு உள்ளன. தற்போது தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம் குட்டைபோல் மாறி கிடக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர். சேறும், சகதியுமாக இருப்பதால் முதியவர்கள், மாணவர்கள், பெண்கள் நடந்து செல்லவே சிரமபடுகின்றனர். எனவே ஆபத்தான இந்த சாலை பள்ளங்களை உடனடியாக சரிசெய்யவும், இந்த சாலையை தார்சாலையாக மாற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பூட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், செம்பூதி ஊராட்சி, சிவந்திலிங்கபுரத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி இப்பகுதியில் ஆண்கள், பெண்களுக்கு என சமுதாய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த இந்த சுகாதார வளாகம் சில நாட்களிலேயே மூடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். மேலும் இந்த சுகாதார வளாகத்தில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வெள்ளாற்று பாலம் அருகே சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதி காயமடைந்து வருகின்றனர். மேலும் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை சாலை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பஸ்களில் பெயர் பலகை வைக்க கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி வழியே செல்லும் அரசு நகர மற்றும் புறநகர பஸ்களில் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்கிறது. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.