தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பாலவிடுதி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மைலம்பட்டி அல்லது 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடவூருக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலவிடுதியில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோய் பரவும் அபாயம்
கரூர் மாவட்டம், ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வரா நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து, கழிவுநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம், வடுகபட்டி, குந்தாணிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இந்தக் கருவேல மரங்கள் அதிக அளவில் முடித்துள்ளதன் காரணமாக நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வரும் நிலை ஏற்படும். அதேபோல் சீமைக்கருவேல மரத்தில் உள்ள காய்களை கால்நடைகள் சாப்பிட்டால் கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை உண்டாகும். சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ள இடங்களில் எந்த விவசாய பயிர்களும் முளைக்காது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தூர்வாரப்படாத உபரிநீர் கால்வாய்
கரூர் மாவட்டம், காளிபாளையம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் வகையில் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக ஏராளமான உபரிநீர் சென்றது. அதேபோல் மழைக்காலங்களில் இந்த உபரிநீர் வாய்க்கால் வழியாக மழைநீர் சென்றது. இந்நிலையில் உபரிநீர் கால்வாய் முழுவதும் நெடுகிலும் சம்பு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் ஆள் உயரம் முளைத்துள்ளது. இதன் காரணமாக இந்த உபரிநீர் கால்வாய் வழியாக உபரிநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதேபோல் மழை காலங்களில் மழைநீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சித்துறை நிர்வாகத்தினர் உபரிநீர் வாய்க்காலில் முளைத்துள்ள சம்பு மற்றும் பல்வேறு வகையான செடி,கொடிகளை அகற்றி உபரிநீர் தங்கு தடை இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாலையை சீரமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், திருக்காடுதுறையிலிருந்து நத்தமேடு வழியாக செல்லும் புகழூர் வாய்க்கால் கரை சாலையில் இருபுறமும் ஏராளமான நாணல் தட்டுகள் மற்றும் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதன் காரணமாக புகளூர் வாய்க்கால் ஓரத்தில் செல்லும் சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையின் இருபுறமும் முளைத்துள்ள நாணல் தட்டு மற்றும் பல்வேறு செடி, கொடிகளை அகற்றி புகழூர் வாய்க்கால் மேட்டில் உள்ள சாலை வழியாக வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.