தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-19 19:42 GMT

பொதுக்கழிவறை இன்றி மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதி மற்றும் பஸ் நிறுத்தத்தில் இயற்கை உபாதைக்கு செல்ல பொது கழிவறைகள் இல்லாததால் பஸ் பயணிகள் மற்றும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நீண்ட தூரங்களில் இருந்து வரும் பஸ் பயணிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை காய்கறி வியாபாரத்திற்கு வரும் வியாபாரிகள் இயற்கை உபாதைக்கு செல்ல சரியான கழிவறை வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மீன்சுருட்டி கடைவீதி.

பஸ்கள் இயக்க நேரத்தை கூட்ட கோரிக்கை

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு இரவு 9.30 மணிக்கு மேல் பஸ் வசதிகள் இல்லை. இதனால் வெளி ஊரிலிருந்து வரும் பொதுமக்கள் பஸ் வசதிகள் இல்லாததால் ஆட்டோவுக்கு ரூ.300, ரூ.400, ரூ.500 கொடுத்து அவங்க அவங்க ஊருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்களின் நிலையை அறிந்து இரவு நேரங்களில் கூடுதலாக இரவு 12 மணிவரை பஸ்கள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மகேந்திரஜோதி, ஜெயங்கொண்டம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், உஞ்சினி அம்பேத்கர் நகரில் குண்டும், குழியுமாக இருந்த சாலை தார்சாலையாக மாற்றுவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சாலை பரிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை தார்சாலை அமைக்கப்படாமல் மண் சாலையாக காணப்படுகிறது. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது புழுதி பறப்பதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உஞ்சினி.

சாலையில் தேங்கும் சுண்ணாம்பு கற்கள்

அரியலூர் மாவட்டம், வி.கைக்காட்டிற்கு தெற்கே பெரிய திருக்கோணம் செல்லும் முதன்மை சாலையில் அமைந்துள்ளது மு.புத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி அதிகபாரத்துடன் படுதா போடாமல் அசுர வேகத்தில் மங்கட்டான் மற்றும் சேலத்தர் காடு கிராமங்கள் வழியாக அரியலூருக்கு சுண்ணாம்பு கற்களை ஏற்றி செல்கின்றனர். லாரிகள் வேகமாக செல்வதினால் சுண்ணாம்பு கற்கள் சாலையில் சிதறி விழுந்து சாலையின் இரு புறமும் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து மேடாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சேலத்தார்காடு.

Tags:    

மேலும் செய்திகள்