தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
100 நாள் வேலை வழங்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் இந்த ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை வேலை வழங்கவில்லை. தற்போது 8-வது மாதம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இனியும் வழங்கவில்லை என்றால் இந்த ஆண்டு முழுவதும் 100 நாள் வேலை வழங்க வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சங்கர், நெருஞ்சிக்கோரை.
மயானத்திற்கு செல்ல தடை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் வகையில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சமூக ஆர்வலர், வெற்றியூர்.
நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குழுமூர்.
எரியாத தெருவிளக்குகள்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில் திருச்சி மார்கத்தில் மேல் பகுதியில் 4 மின் விளக்குகள் உள்ள மின்கம்பத்தில் ஒரு மின் விளக்கு கூட எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காத்தவராயன், ஜெயங்கொண்டம், அரியலூர்
மதுப்பிரியர்களால் பெண்கள் அச்சம்
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பெரிய ஏரியின் கரையில் விளாங்குடி-சாத்தான்குடிகாடு செல்லும் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் இந்த தார்சாலையோரம் அமர்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் கவர்களையும் இந்த ஏரியில் வீசி சென்று விடுகின்றனர். மேலும் மதுப்பிரியர்கள் மது போதையில் சாலையின் ஓரத்திலேயே படுத்துக்கொள்வதினால் இரவு நேரத்தில் இந்த வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விளாங்குடி.