திருச்சியில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி தொடங்கியது

திருச்சியில் ‘தினத்தந்தி' கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று உயர்படிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

Update: 2022-06-06 20:09 GMT

திருச்சி, ஜூன்.7-

திருச்சியில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று உயர்படிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.

'தினத்தந்தி' கல்வி கண்காட்சி

பிளஸ்-2 முடித்தபிறகு உயர்கல்வி படிப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கும் உயர்கல்வி தான் அவர்களது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். ஆனால் பிளஸ்-2 முடித்து உயர்கல்வியை தேர்வு செய்வதில் மாணவ-மாணவிகளுக்கிடையே பல்வேறு சந்தேகங்களும், குழப்பமும் நீடித்து வருகிறது.

இதில் பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு சரியான வழியை காட்டுவதில் சிரமம் அடைந்து வருகிறார்கள். இவ்வாறு தவிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் சிரமத்தை போக்கும் வகையில் 'தினத்தந்தி' கல்வி கண்காட்சியை நடத்தி உயர்கல்வி குறித்து அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி வருகிறது.

தொடக்க விழா

அந்த வகையில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை எழுதி முடித்து, உயர்கல்வியில் சேர்வதற்கு ஆவலோடு காத்திருக்கும் மாணவ-மாணவிகளின் கனவுக்கு ஏணிப்படியாக, 'தினத்தந்தி' - எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சி திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக மங்கள் அண்டு மங்கள் நிறுவன உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக பேராசிரியர் கே.மணிகண்டன், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் விஜயராகவன், தினத்தந்தி திருச்சி பதிப்பு மேலாளர் எஸ்.ஆர்.சிவசுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை தலைவர் பேராசிரியர் ஆர்.மங்கலேஸ்வரன், சென்னை ஐ.ஆர்.எம்.எஸ். முதன்மை செயல் அதிகாரி சி.ராஜா, சென்னை தினத்தந்தி மார்க்கெட்டிங் முதன்மை செயல் அதிகாரி ஸ்கந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைகள்

கல்வி கண்காட்சியில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், என்ஜினீயரிங், ஓட்டல் நிர்வாகம், கலை மற்றும் அறிவியல், மரைன் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள் உள்பட அனைத்து துறைகளில் சிறந்து விளங்கும் முன்னணி கல்வி நிறுவனங்களின் சார்பில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு படிப்பிலும் உள்ள பாடத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் பற்றிய முழுமையான தகவல்கள் மாணவ-மாணவிகளுக்கு சேரும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

கண்காட்சியை பார்வையிடுவதற்காக திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்தனர். அவர்கள் ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம்?. எங்கு படிக்கலாம்?. கல்வி கட்டணம் எவ்வளவு?. விடுதி வசதி உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

கையேடுகள்

மருத்துவம், என்ஜினீயரிங், பல்மருத்துவம், மைக்ரோபயாலஜி, ஏரோனாட்டிக்கல் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், சட்டம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் உள்பட பல்வேறு படிப்புகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அவற்றில் சேர்ந்து படிப்பதற்கான வழிமுறைகள், அதில் சேருவதற்கான கல்வி தகுதிகள், உதவித்தொகை பெறுவதற்கான வழிகள் போன்றவற்றை அந்தந்த அரங்குகளில் இருந்தவர்கள் தெளிவான விளக்கங்களை அளித்தனர்.

தேசிய அளவில் நடத்தப்படும் உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வுகள், அவற்றை எழுதுவதற்கான பயிற்சி மற்றும் வழிமுறைகள் குறித்தும், கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சென்று படிக்கக்கூடிய படிப்புகள் மற்றும் அது பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. கல்வி நிறுவன அரங்குகளில் அந்த நிறுவனங்களை பற்றிய கையேடுகள், விளக்க குறிப்புகள் வழங்கப்பட்டன.

இன்றுடன் நிறைவு

'தினத்தந்தி' கல்வி கண்காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம். நேற்று தொடங்கிய கண்காட்சியை ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

கல்வி கண்காட்சியில் எஸ்.ஆர்.எம்.கல்வி குழுமங்கள், பிளாட்டினம் ஸ்பான்சராக பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அசோசியேட் ஸ்பான்சர்களாக வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம், அமெட் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மற்றும் சிவ்நாடார் பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

உயர்கல்வி படிப்புகள்

கண்காட்சியில் கல்வியாளர் சி.ராஜா, பாரதிதாசன் பல்கலைக்கழக சமூகப்பணித்துறை தலைவர் பேராசிரியர் ஆர்.மங்கலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு, உயர்கல்வி படிப்புகள் மற்றும் உயர்கல்வி படித்தவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு மாணவ-மாணவிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்