சிங்கமகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கொள்ளிடம் அருகே சிங்கமகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Update: 2023-08-10 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் பழமை வாய்ந்த சிங்கமகா காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த 30-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. நிகழ்ச்சியின் 10-ம் நாளான தீமிதி திருவிழாவை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மாலை முக்கிய வீதிகள் வழியாக சிங்கமகா காளியம்மன், பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் உலா வரும் காட்சி நடந்தது. தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிராமத்தில் உள்ள குளத்தில் புனித நீராடி தலையில் கரகம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து கோவிலின் முன்புறம் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு வைத்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்