பாழடைந்த கட்டிடங்கள் இடிந்து விழும் நிலை: புதுக்கோட்டை நகரில் முக்கிய வீதியில் சுகாதார கேடு
புதுக்கோட்டையில் முக்கிய வீதியில் பாழடைந்த கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையிலும், சுகாதார கேடு மற்றும் இரு சாலைகளை இணைக்கும் பகுதியில் ஆக்கிரமிப்புகள் காணப்படுவதால் தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டுரெங்கன் தெரு
புதுக்கோட்டை நகரில் முக்கிய வீதி கீழ ராஜ வீதியாகும். வணிக நிறுவனங்கள், கடைகள், வங்கிகள், முக்கிய நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை அதிகம் காணப்படுகிறது. இதேபோல் இந்த வீதியை சுற்றி மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி ஆகிய வீதிகள் காணப்படுகின்றன. 4-க்கு 4 என 16 வீதிகளை கொண்டது புதுக்கோட்டை நகரம் என சொல்லப்படுவது உண்டு. இந்த வீதிகளை இணைக்கும் வகையில் சாலைகள் உள்ளன. இந்த வீதிகள் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த நிலையில் கீழராஜ வீதியையும், கீழ 2-ம் வீதியையும் இணைக்க கூடிய வகையில் சாலைகள் உள்ளன. இதில் பாண்டுரெங்கன் தெருவில் சுகாதார கேடு அதிகமாக உள்ளது. பழமையான கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் சில உள்ளன. இதில் சில இடங்கள் திறந்தவெளி கழிப்பிடம் போல் பயன்படுத்தப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
அமைச்சர் வீட்டின் அருகே...
இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் அசுத்தமாக காணப்படுகிறது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வசிக்கும் வீட்டின் அருகே இந்த வீதி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும் இரு சாலைகளை இணைக்க கூடிய பகுதியில் மாலை நேர சந்தை என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்புகளால் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பாண்டுரெங்கன் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய தார்ச்சாலை அமைத்து இந்த வீதியை சுகாதாரமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது இந்த இடத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சில சமயங்களில் மலைபோல் குவிந்து விடுகிறது. இதனை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அவ்வப்போது அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் குப்பைதொட்டிகள் எதுவும் வைக்கப்படாத நிலையில், இந்த சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் அப்பகுதியினர் குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்
கீழ ராஜ வீதியையும், கீழ 2-ம் வீதியையும் இணைக்கும் வகையில் இந்த பாண்டுரெங்கன் தெருவில் புதிதாக தார்ச்சாலை அமைத்து வாகன போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும். மேலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாற்றலாம் என பொதுமக்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர். ஏனெனில் கீழ ராஜ வீதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இந்த சாலையை பயன்படுத்த முடியும்.
இதேபோல் கீழ ராஜ வீதியில் இருந்து நுழையக்கூடிய இந்தசாலையில் பாழடைந்த கட்டிடங்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக காணப்படுகிறது. இதில் விபத்து ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை நகரில் பழமையான ஜவுளி நிறுவன கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த போது இடிபாடுகளில் கட்டிட தொழிலாளர்கள் பலர் சிக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.