சிதம்பரத்தில்தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்?மண்டபத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்ததால் பரபரப்பு

சிதம்பரத்தில் தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம் நடப்பதாக வந்த தகவலின் போில் மண்டபத்துக்கு நேரில் சென்று அதிகாரிகள் விசாரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-09 18:45 GMT


சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15-வது சிறுமிக்கும், 20 வயது வாலிபர் ஒருவருக்கும் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக, சைல்டு லைன் அமைப்புக்கு புகார் சென்றது. இதையடுத்து, கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர் சுகன்யா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு குழந்தைகள் நல அலுவலர் முகுந்தன் மற்றும் சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார், அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

அங்கு திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்ட சிறுமியின் பெற்றோர், வாலிபரின் பெற்றோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இங்கு குழந்தை திருமணம் ஏதும் நடைபெறவில்லை என்று கூறி அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும் தீட்சிதர்கள் தரப்பில் பூணூல் தான் மாற்றுகிறோம். யாருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்றனர். உடனே அதிகாரிகள், திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, வழங்கப்பட்டுள்ளதே என்று ஒரு அழைப்பிதழை காண்பித்து கேட்டனர். அப்போது அவர்கள் அது போலியானது என்றனர். இருப்பினும், அவர்களை எச்சரிக்கை செய்த அதிகாரிகள், சிறுமியின் பெற்றோரிடம் 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்பாக திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று கூறி கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்