டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்

விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை உயர்த்தி வழங்குவதோடு, உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-13 20:21 GMT

சேதுபாவாசத்திரம்:

விசைப்படகுகளுக்கு டீசல் மானியத்தை உயர்த்தி வழங்குவதோடு, உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை மனு

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் அ.தாஜூதீன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

மீன்பிடி தடைக்காலம் இன்று(புதன்கிழமை) நள்ளிரவு நிறைவடையும் நிலையில் விசைப்படகுகள் 16-ந்தேதி அதிகாலை தான் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நிலை உள்ளது.

டீசல் மானியம்

டீசல் விலை உயர்வால் மீனவர்கள் நஷ்டத்துடனே தொழில் செய்யும் நிலையில் உள்ளனர். எனவே, மீனவர்களுக்கு வழங்கும் டீசலை உற்பத்தி விலைக்கே மத்திய, மாநில அரசு வழங்க வேண்டும். மேலும் டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு வழங்கி வரும் உற்பத்தி வரி நீக்கம் செய்து தரும் டீசல் அளவை, தேர்தல் அறிக்கையில் கூறியது போல் மாநில அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

உரிய விலை

மீன்பிடி தடைக்காலம் முடிந்து படகுகள் எடுக்கும்போது மீனவர்கள் பிடித்து வரும் இறால், மீன், கணவாய் போன்ற ஏற்றுமதி கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதால் மீனவர்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

இது கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக, கடல் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்