தளி,
உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றது. ஆங்காங்கே ஆள் இறங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளது.அவற்றில் தரமற்ற மூலப்பொருட்கள் உபயோகப்படுத்தப்பட்டதால் தொட்டிகள் சேதமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
உடுமலை நகராட்சிக்கு பாதாள சாக்கடை திட்டம் வரவேற்கக் கூடிய ஒன்றாக இருந்தாலும் அதன் கட்டுமானப் பணிகள் தரமற்றதாக இருப்பதால் தொட்டிகள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. மேலும் சாலையின் சமதளத்திற்கு ஏற்றாற்போல் அவை கட்டப்படுவதில்லை. சாலையை விடவும் உயரமாக உள்ளது அல்லது பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். தரமற்ற மூலப்பொருட்கள் உபயோகத்தால் தொட்டிகள் சேதமடைந்து வருவது தொடர்கதையாக உள்ளது.அதை சீர் அமைப்பதில் அக்கறை காட்டாததால் மீண்டும் மீண்டும் அவற்றை கட்ட வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு சேதம் அடைந்து வரும் தொட்டிகளை தரமான கட்டுமான பொருட்கள் கொண்டு கட்டுவதற்கு முன்வரவேண்டும். முதலில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.