இடிந்து விழும் நிலையில் மாநகராட்சி பள்ளி கட்டிடம்

இடிந்து விழும் நிலையில் மாநகராட்சி பள்ளி கட்டிடம்

Update: 2022-11-02 10:20 GMT

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 25-வது வார்டு சோளிபாளையத்தில் இடிந்து விழும் நிலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளதால் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி தொடக்கப்பள்ளி

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட சோளிபாளையத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 31 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் ஒரு ஆசிரியரும், ஒரு தலைமையாசிரியையும் அந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஓடுகளால் ஆன கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

பள்ளியின் முன்பகுதியில் உள்ள வராண்டாவில் பல இடங்களில் ஓடுகள் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளன. அதேபோல் ஓடுகளை தாங்கி உள்ள மரக்கட்டைகள் அனைத்தும் மிகவும் பழமையாக இருப்பதால் கரையான்கள் அரித்து எந்த நேரத்தில் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன. பள்ளியின் கதவின் மூலை மற்றும் சுவர் பகுதியை கரையான் முற்றிலும் அரித்துள்ளது. அந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகள் உள்ள நிலையில் 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

ஆபத்தான நிலையில்

இதனால் ஏற்கனவே இடவசதி குறைபாடு உள்ள நிலையில், மாணவர்கள் மதிய உணவை முன்பகுதியில் உள்ள வராண்டாவில் அமர்ந்தே சாப்பிட்டு வருகின்றனர். அங்குதான் கட்டிடத்தின் மேற்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. 68 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடம் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையிலும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலும் இருப்பதால் பள்ளியின் வராண்டா பகுதியை இடித்து அகற்ற வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் கடந்த 1 ஆண்டிற்கு முன்பே மாநகராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் பின்னர் பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் சென்று பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டு, அளவீடு செய்துள்ள போதிலும், இதுவரை பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி கவுன்சிலர் தங்கராஜ் சார்பிலும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் குற்றச்சாட்டு

கட்டிடம் இடிந்து விழுந்து ஒரு உயிரிழப்பு ஏற்பட்டால் மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பு என்றும், மாணவர்களின் உயிரோடு மாநகராட்சி நிர்வாகம் விளையாடுவதாகவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் சேதமடைந்து காணப்படும் பள்ளி கட்டிடத்தின் முன்பகுதியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்றும், மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்திலேயே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்