தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
திண்டிவனம் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் வேதவள்ளியம்மாள் அறக்கட்டளை சார்பில் அரசு நிதிஉதவி பெறும் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி மாணவர்களுக்கு இந்தாண்டுக்கான அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவர்களை நிர்வாகத்தினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்காத தொடக்க கல்வி அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என சுறி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திண்டிவனம் கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், தொடக்கக்கல்வி அலுவலர் மணிமொழி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி நடைபெறும் கட்டிடம் தரமாக உள்ளதா என அரசு பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் திண்டிவனம் தாசில்தாரிடம் உரிய சான்றிதழ்களை பெற்றுவழங்க வேண்டும் என நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மாற்றுச்சான்றிதழை கேட்டால் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.