சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த கோரி தர்ணா போராட்டம்

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-20 18:14 GMT

தர்ணா போராட்டம்

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்திட முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தழுவிய மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடக்க உரையாற்றினார்.

உடனடியாக நிரப்பிட வேண்டும்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் சவிதா ராஜலிங்கம் விளக்கி பேசினார். அப்போது சத்துணவு ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தப்பட்ச குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்புகாளை நிறைவுரையாற்றினார். முன்னதாக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிசெல்வி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்