விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-08 19:13 GMT

விருத்தாசலம், 

திட்டக்குடி நகராட்சி மணல்மேடு ரோட்டு தெரு பகுதியில் மலைவாழ் குறவர்கள் இனத்தை சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். கூடை பின்னும் தொழில் செய்து வரும் இவர்கள் நேற்று விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம், சப்- கலெக்டர் பழனி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அடித்தட்டு மக்களான எங்களுக்கு கிடைக்க வேண்டிய எஸ்.டி. சாதிசான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகள் கிடைப்பதில்லை.

திட்டக்குடி அரசு பள்ளி மற்றும் இதர பள்ளிகளில் படித்து வரும் எங்கள் குழந்தைகளிடம், உங்கள் சாதி சான்றிதழை கொடுங்கள், இல்லையென்றால் தேர்வு எழுத முடியாது என பள்ளி ஆசிரியர்கள் தினம் தோறும் சொல்லி அனுப்பி விடுகின்றனர். எனேவ எங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட சப்-கலெக்டர் பழனி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் விருத்தாசலம் நகர செயலாளர் சேகர், நகர தலைவர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்தர், வெங்கடாசலம், தொகுதி செயலாளர் அருண்குமார், ராம் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்