விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா

விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா

Update: 2022-07-16 20:01 GMT

மெலட்டூர்:

டைல்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா

பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே விளை நிலங்கள் நடுவே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், தஞ்சை மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் பாட்சாரவி உள்பட விவசாய சங்கத்தினர் டைல்ஸ் நிறுவன சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டைலஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கலெக்டர், கோட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் எனவும் விவசாய சங்கத்தினர் கூறினர். ஆனால் 2 பேரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக வராததை கண்டித்து விவசாய சங்கத்தினர் திடீரென சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கும்பகோணம் கோட்டாட்சியர் லதா சம்பவ இடத்திற்கு வந்து விவசாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டக்குழுவினர் கோரிக்கையை ஏற்று 1 வார காலத்திற்கு டைல்ஸ் நிறுவன கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை விவசாய சங்கத்தினர் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்