பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-04-30 21:00 GMT

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதிலும் வார விடுமுறை, சஷ்டி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி, நேற்று வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்களும் பழனிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதனால் அதிகாலை முதலே பழனி அடிவாரம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கார், பஸ், வேன் போன்ற வாகனங்களில் அதிக அளவில் வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவிலில் உள்ள பொது, கட்டணம், கட்டளை தரிசன வழிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தரிசன வழிகளை கடந்து வெளிப்பிரகாரத்திலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்