வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர்.

Update: 2022-11-06 17:21 GMT

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர்.

பக்தர்கள் கூட்டம்

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

வார விடுமுறை, சுப முகூர்த்தம், கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு அதிகரித்து காணப்படும். அந்தவகையில் இன்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தனர்.

குறிப்பாக பழனியில் படிப்பாதை, யானைப்பாதை, அடிவாரம் பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காத்திருந்து தரிசனம்

இதேபோல் மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம், தரிசன வழிகள் மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி வ.உ.சி. பஸ் நிலைய பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே பழனியில் நேற்று காலை 11 மணி வரை வெயில் நிலவிய நிலையில், 11.30 மணிக்கு மேல் வானில் மேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நனைந்தபடி கோவிலுக்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்