மேலச்சேரிபச்சையம்மன் கோவிலில் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு

மேலச்சேரி பச்சையம்மன் கோவிலில் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனா்.

Update: 2023-08-04 18:45 GMT


செஞ்சி, 

செஞ்சியை அடுத்த மேலச்சேரி காப்புக்காட்டில் பச்சையம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குலதெய்வமாக உள்ளது. நேற்று ஆடி 3-வது வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமானவர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் பொங்கலிட்டு, வழிபட்டனர். மேலும் பலர் ஆடு, கோழிகளை பலி கொடுத்தும், மொட்டை அடித்தும் வழிபாடு செய்தனர்.

பின்னர், பலி கொடுத்த ஆடு, கோழிகளை அங்கேயே சமையல் செய்து, அன்னதானமும் வழங்கினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுவாக இந்த கோவிலுக்கு ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாததால், அவர்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இனிவரும் காலங்களில் கோவில் நிர்வாகம் அல்லது ஊராட்சி சார்பில் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து, அவர்கள் மனம்மகிழ்ந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று, ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று, செஞ்சி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்