கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படடது. 

Update: 2023-08-13 21:30 GMT

வண்டி கருப்பணசாமி

அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் பிரசித்திபெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது. திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் திண்டுக்கல்-திருச்சி சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோவில் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து, காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். மேலும் புதிதாக வாகனம் வாங்குவோர் தங்களது வாகனங்களை இந்த கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள்.

அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆட்டோ, கார், டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை வண்டி கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்து சிறப்பு பூஜை செய்து கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

கிடாவெட்டி விருந்து

அதன்படி, நேற்று ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வண்டி கருப்பணசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கிரேன்கள், பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர்கள், பள்ளி பஸ்கள், ஆட்டோ, கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களை பூஜை செய்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வந்திருந்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக 70-க்கும் மேற்பட்ட கிடாக்களும் அழைத்துவரப்பட்டிருந்தன.

அப்போது வண்டி கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவிலில் கிடா வெட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தங்களது வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதைத்தொடர்ந்து கிடாக்களின் இறைச்சியை சமைத்து, பக்தர்கள் தங்களது உறவினர்களுக்கும், கோவிலுக்கு வந்த மற்ற பக்தர்களுக்கும் அசைவ விருந்தை பரிமாறினர்.

போக்குவரத்து நெரிசல்

இதற்கிடையே நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் வளாகத்தில் நிற்க கூட இடமின்றி பக்தர்கள் தவித்தனர். அதேபோல் கோவில் முன்பு சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்