பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில்,
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமை
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களும் ஒவ்வொரு இந்து தெய்வங்களுக்கு உகந்ததாக கருத்தப்படுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக சொல்லப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி ஆனந்தம் கிடைக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடந்தது.
குடும்பம் குடும்பமாக
இந்த பூஜைகளில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இடர்தீர்த்த பெருமாள்
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலான வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக பெருமாளை தரிசிப்பதற்காக ஏராளமான ஆண்களும், பெண்களும் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
-