அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் தரிசனம் செய்த பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-08-11 20:00 GMT

ஆடி மாத கடைசி வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் இருந்து பகல் 11 மணிவரை பக்தர்கள் வழங்கிய பாலைக்கொண்டு அம்மனுக்கு தொடர்ந்து பால் அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 12 மணி அளவில் அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. இதில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார். மேலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு கூழ் படைத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கூழை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

பக்தர்கள் குவிந்தனர்

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணியளவில் அபிராமி அம்மன் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மல்லிகை, ரோஜா, முல்லை உள்பட பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் சன்னதி முன்பு மலர் பந்தல் அமைக்கப்பட்டது. அதன்பிறகு மாலை 4.30 மணி அளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் பாரதிபுரம் மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில், நத்தம் சாலை அஷ்டலட்சுமி கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி அங்காள பரமேஸ்வரி கோவில், கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

பழனி, நத்தம்

பழனி மாரியம்மன் கோவில், ரணகாளியம்மன் கோவில் கிரிவீதிகளில் உள்ள துர்கை அம்மன் கோவில், காளிகாம்பாள் கோவில், பழனி ெரயில்வே காலனி முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் விளக்கு ஏற்றியும், கூழ் ஊற்றியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

பழனியில் பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்தார்.

நத்தம் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், வண்ண பூமாலைகளால் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் நத்தம் பகவதியம்மன், காளியம்மன், ராக்காயி, தில்லை காளியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல்

கொடைக்கானல் ஆனந்தகிரியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் வழிபாடு செய்தனர். இதேபோல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோவில், டிப்போ காளியம்மன் கோவில், பாம்பார்புரம் பெரிய காளியம்மன் கோவில், டோபிகானல் காளியம்மன் கோவில், அண்ணாநகர் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி உலக நன்மை வேண்டி யாகவேள்வி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு எலுமிச்சை பழங்களால் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். இதேபோல் பட்டிவீரன்பட்டி பத்ரகாளியம்மன் கோவில், காளியம்மன்-பகவதியம்மன் கோவில், அய்யம்பாளையம் சின்ன முத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோவில், சித்தரேவு முத்தாலம்மன் கோவில், பால்பண்ணை காளியம்மன் கோவில், மந்தையம்மன் கோவிலிலும் சிறப்பு பூைஜ நடைபெற்றது.

கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் விஷ்ணு துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், பெண்கள், சிறுமிகள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்