அம்மச்சாரம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள்

செஞ்சி அருகே அம்மச்சாரம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2023-07-23 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி அருகே குறிஞ்சிப்பை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மச்சாரம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவு நேரங்களில் அம்மன் வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. இதுதவிர விழாவை முன்னிட்டு கிரிக்கெட், கபடி, பெண்களுக்கான கோலப்போட்டி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சிவசுப்பிரமணியர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக அம்மச்சாரம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குறிஞ்சிப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடு்த்து மதியம் கூழ்வார்த்தல், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை அம்மச்சாரம்மன் கோவில் குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்