குமரியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை;பறக்கும் காவடி, தொட்டில் காவடி எடுத்து புறப்பட்டனர்

குமரி மாவட்டத்தி்ல் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி பவனி புறப்பட்டது.

Update: 2023-02-25 17:55 GMT

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தி்ல் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி பவனி புறப்பட்டு சென்றது.

மாசி திருவிழா

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி கட்டி பாதயாத்திரையாக திருச்செந்தூர் செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு பக்தர்கள் 41 நாள் விரதம் இருந்து காவடி பூஜை செய்து விழா ஏற்பாடுகளை வழக்கமான உற்சாகத்துடன் செய்து வந்தனர். அந்த வகையில் நேற்று பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

காவடி புறப்பாடு

இதற்காக அந்தந்த பகுதியில் உள்ள கோவிலில் வழிபாடுகள் செய்த முருக பக்தர்கள் புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி, சூரிய வேல் காவடி, தொட்டில் காவடி எடுத்து சென்றனர். பாதயாத்திரையின் போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வேல் முருகனுக்கு அரோகரா... என விண்ணதிர முழக்கமிட்டவாறு திங்கள்சந்தை, இரணியல், பரசேரி, தோட்டியோடு வழியாக சென்றது. அப்போது வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று காவடிக்கு வரவேற்பு கொடுத்தனர்.

குளச்சல் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்தும் பறக்கும் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல காவடிகள் கட்டப்பட்டு திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, ஊரில் திரு வீதி உலா சென்றது. மாலையில் அனைத்து காவடிகளும் குளச்சல் ஆலடி அதிசய நாகர் ஆலயம் சந்திப்பு வந்தடைந்து. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மணவாளக்குறிச்சி

இதேபோல மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து திருச்செந்தூர் முருகனுக்கு செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பறக்கும் வேல் காவடி மற்றும் புஷ்பக்காவடி நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 4 மணிக்கு நையாண்டி மேளம், மாலை 6 மணிக்கு வேல் தரித்தல், இரவு 7 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், 9 மணிக்கு காவடி பெரும் பூஜை நடந்தது. 2-ம் நாள் காலை காவடி பவனி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தீபாராதனையும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது. மாலை 4 மணிக்கு பறக்கும் வேல் காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

இதுபோல் வடக்கன் பாகம் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடியும், சேரமங்கலம் ஆழ்வார்சாமி கோவிலில் இருந்தும் பறக்கும் வேல்காவடி புறப்பட்டு சென்றது.

பாதுகாப்பு

இதனையொட்டி திங்கள்நகர் முதல் தோட்டியோடு வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் விடப்பட்டன. குளச்சலில் இருந்து திங்கள்சந்தை வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ்கள் மேற்கு கடற்கரை சாலை வழியாகவும், கருங்கலில் இருந்து திங்கள்சந்தை வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ்கள் நெய்யூர் தக்கலை வழியாகவும் திருப்பி விடப்பட்டன. மேலும், காவடி திருவிழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்